search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கொறடா ராஜேந்திரன்"

    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #18MLAsDisqualification #TTVDhinakaran
    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து அந்த 18 பேரிடமும், டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர்.

    இந்த ஆலோசனையின் முடிவில், தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.  காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

    டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என்றும், அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டபோது, ‘மண் குதிரை யார் என்பதை, எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்’ என்றார் தினகரன்.  #18MLAsDisqualification #TTVDhinakaran
    கருணாஸ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #Karunas #MaduraiHighCourt

    சென்னை:

    நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சென்னை போலீசாரால் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் அதிகாரி அரவிந்தன் ஆகியோரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கருணாசை முதலில் கைது செய்தனர்.

    இதன்பின்னர் சேப்பாக்கம் போராட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த 2 வழக்குகளிலும் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    தினமும் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் அவர் கையெழுத்திட உத்தரவிடப்பட்டு இருந்தது.


    சென்னை போலீசார் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார்.

    இந்த நிலையில் புளியங்குடியில் கடந்த ஆண்டு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரின் கார் உடைக்கப்பட்ட வழக்கில் கருணாசை கைது செய்ய புளியங்குடி போலீசார் சென்னை வந்தனர்.

    சாலி கிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

    இதையடுத்து கருணாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் கருணாஸ் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது 8-ந்தேதிக்கு முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி கருணாசின் முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. அப்போது கருணாசுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸ் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். #Karunas  #MaduraiHighCourt

    கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். #Dhanapal #Karunas
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அணிக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வந்தனர்.

    அவர்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால் சபாநாயகர் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் 2 நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதியான எம்.சத்திய நாராயணன் விசாரித்தார்.

    இதில் இருதரப்பு வாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில் கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளார்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    இதேபோல் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களில் பிரபு கள்ளக்குறிச்சி தொகுதியிலும், ரத்தினசபாபதி அறந்தாங்கியிலும், கலைச்செல்வன் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.

    இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தனது அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசினார். கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.

    இதில் கைதாகி விடுதலையான பின்பு மீண்டும் தாக்கிப் பேசினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பேனர் வைத்த முதல்வர், துணை முதல்வர் மீது ஏன் வழக்கு போடவில்லை. இது பற்றி நீதிமன்றம் வழியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் கருணாஸ் கூறினார்.

    முதல்-அமைச்சருக்கு எதிராக கருணாஸ் தொடர்ந்து கூறி வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அ.தி.மு.க. கருதுகிறது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கருணாஸ் எம்.எல்.ஏ. சசிகலாவையும், தினகரனையும் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவலும் ஆதாரமாக அரசு தரப்பில் திரட்டப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

    தினகரன் நடத்திய ஆலோசனை கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு முதல்- அமைச்சருக்கு எதிராக பேசி வருகிறார்கள். இதனால் இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட கூட்டங்கள், பேச்சுக்கள் தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.


    அவர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சபாநாயகர் தனபாலுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதன் பிறகு சபாநாயகர் தனபால் தனது அலுவலகத்தில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினர். இதில் அரசு கொறடா ராஜேந்திரனும் கலந்து கொண்டார். இரவு வரை இந்த ஆலோசனை நடந்தது.

    அதன் பிறகு 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்தார். அத்துடன் 4 எம்.எல்.ஏ.க்களின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

    இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகவே அவர் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்.

    தங்கள் செயலுக்கு 4 பேரும் வருத்தம் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினாலோ அல்லது சபாநாயகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தாலோ அது ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது, மன்னிப்பு அளிக்கப்படும்.

    இதில் பதில் அளிக்க மேலும் கால அவகாசம் கேட்கலாம். அதுவரை சபாநாயகர் பொறுத்து இருப்பார். ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் காலம் கடத்தினாலோ, தங்கள் செயலை நியாயப்படுத்தினாலோ 4 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. இதனால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் அ.தி.மு.க.வின் பலம் மேலும் குறைகிறது.

    தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். இதில் அ.தி.மு.க.வின் பலம் 134 ஆக இருந்தது. அ.தி.மு.க. வசம் இருந்த ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததாலும், 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் நீக்கப்பட்டதாலும் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை நீக்கினால் அ.தி.மு.க. பலம் 110 ஆக குறைய வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கருணாநிதி மறைவால் 88 ஆக உள்ளது. காங்கிரஸ் வசம் 8 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லிம் லீக் வசம் ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். இதனால் தி.மு.க. அணியின் பலம் 97 ஆக உள்ளது.

    இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி (மனித நேய ஜன நாயக கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோர் அ.தி.மு.க. பக்கம் உள்ளனர். #ADMK #Dhanapal #ADMKMLAs #Karunas
    ×